கோயம்புத்தூர்: கோவை உக்கடம் அடுத்த பிரகாசம் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் மாரிமுத்து மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாரிமுத்து உயிரிழந்துள்ள நிலையில் விபத்தை ஏற்படுத்திய சூடான் நாட்டை சேர்ந்த சுகைப் என்பவரிடம் இந்தியர் என்ற அடையாளத்தை சொல்லும் ஆதார் அட்டை உள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கோவை உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 20ஆம் தேதி) வழக்கம் போல் பணியை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு காந்திபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர், ஒப்பணக்கார வீதி பிரகாசம் சிக்னல் அருகே வந்தபோது, ஒரு வழி பாதையில் இருந்து எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு காவலர் மாரிமுத்து மற்றும் எதிரே வந்த வாகனத்தில் இருந்த இருவர் என மூன்றுபேரும் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காவல்துறை மரியாதையுடன் தகனமும் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய நபர் சூடான் நாட்டை சேர்ந்த சுகைப் என்பதும் அவர், டெல்லியில் உள்ள தெரசா கல்லூரியில் பி ஃபார்ம் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் தனது நண்பர்களான சுராக் மற்றும் இப்ராஹிம் என்பவரை பார்க்க டெல்லியில் இருந்து கடந்த 30 நாட்களுக்கு முன்பு கோவை வந்த நிலையில் இவர்கள் போத்தனூர் பகுதியில் உள்ள சுராக் வீட்டில் தங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்தியாவில் தங்கி படித்து வரும் மாணவரான சுகைப்பிடம் இந்தியர்களுக்கான அடையாளமாக உள்ள ஆதார் அட்டை இருப்பது போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவருக்கு ஆதார் அட்டை எப்படி கிடைத்தது. இதன் பின்னணியில் வேறு யாரெனும் இருக்கிறார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் கலெக்டர் ஆஜர் - நீதிபதியின் கேள்வியால் பரபரப்பான நீதிமன்றம்!