பணத்திற்காக சொந்த ஊரை விட்டு, நகர வாழ்க்கைக்குப் பயணித்தவர்கள், நகரத்திலேயே தனது வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டனர். சொந்த ஊரில் அழகான சிறிய வீடு, வீட்டுப்பக்கத்தில் சின்னத் தோட்டம், இயற்கை விவசாயம் குழந்தைகளுடன் போதிய வருமானம் இருந்தால் போதும்; அந்த வாழ்க்கையே அற்புதம் தான் என சிலாகிப்பவர்களும் உண்டு.
ஆனால், அப்படியொரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுவதுதான் சிலரது சாதனையாகவே இருக்கிறது. அடித்துப் பிடித்து பேருந்தில் ஏறி, கூட்ட நெரிசலோடு அலுவலகம் சென்று எட்டு மணி நேரம் உழைத்து, சாப்பிட மறந்து, தூக்கத்தை தொலைத்து இயந்திர வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களே தற்காலத்தில் அதிகமாக உள்ளனர். சில நேரங்களில் போரடிக்கத் தொடங்கினாலும், என்னடா... மனித வாழ்க்கை என உச்சுக்கொட்டி விட்டு, மீண்டும் அடுத்த நாள் வேலைக்குச் செல்பவர்கள், ஓயாத கடிகாரம் போல் சுழன்று கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு இல்லாமல் இது உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைத் தரலாம். நாமும் இதேபோன்று வாழ உத்வேகத்தைத் தர வாய்ப்புகளாய் இருக்கும். சாதாரண ஒரு எளிய மனிதனின் வெற்றிதான் பலரது கற்பனைகளுக்குப் பாலமாக இருக்கிறது. தனது இதயத்தில் நினைத்த இல்லத்தை, இயற்கையின் மூலம் இதய வனமாய் மாற்றிக்காட்டியுள்ளார், இளைஞர் இளங்கோ.
கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அடுத்த இரும்பொறை கிராமத்தைச் சேர்ந்தவர், இளங்கோ. இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகர, நவீன வாழ்க்கையை துறந்து இயற்கை மீது கொண்ட காதலால், மலையடிவாரத்தில் இயற்கை எழில் மிகுந்த இடத்தை தேர்வு செய்து, நான்கரை ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளார்.
நகரத்தை நோக்கிய பார்வையை சற்று விலக்கி, "இதய வனம்" எனப் பெயரிடப்பட்ட தோட்டத்தில் பெற்றோர் மற்றும் மனைவியுடன் நவீன வசதிகள் ஏதுமில்லாமல், தனது நிலத்தில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தற்சார்பு வாழ்க்கையை வாழ முயற்சித்துள்ளார்.
ஒழுங்கற்ற முறையில் காணப்படும் இந்த மண் வீடு, இளங்கோ குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் இணைந்து கட்டிக்கொண்ட வீடாகும். வருமானத்திற்காகப் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டி இருப்பதாலும்; அவசரத் தேவைகளுக்காக அங்கு சோலார் மின் வசதி மட்டும் செய்யப்பட்டுள்ளது. மழை நீர் சேமித்து, குடிநீர் தேவைகளுக்கும் விவசாய சேவைகளுக்கும் அவர்களே பயன்படுத்தி வருகின்றனர்.
இரும்பொறை கிராமத்தில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தாமல் மழை நீரின் மூலம் குறைந்த அளவு நீரைக் கொண்டு தேவையான விவசாயத்தை செய்து வருவதாகவும், நீர் இரைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தாமல், புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி வருவதாகவும்; உணவுத் தேவையான காய்கறிகளை தங்கள் நிலத்தில் உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், இயற்கை முறையில் வேலியோரங்களில் விளையும் காய்கறிகளையும் உணவிற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தங்களது வாழ்க்கைக்குத் தேவையான 60 விழுக்காடு தேவைகளை, தங்கள் விவசாய நிலத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். சில பொருள்களை பண்டமாற்று முறையில், தங்களது நண்பர்களிடமிருந்து பெற்று, இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதால் நண்பர்களின் முயற்சியோடு இதனை செய்து வருகிறார்கள். சுத்தமான காற்று, நீர், உணவு கிடைப்பதால் உடல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
சில வருடங்களில் அந்த நிலத்தில் இளங்கோ வைத்துள்ள 800 மரங்கள் மூலம் ஒரு நல்ல சோலை கிடைக்கவுள்ளது. இன்னும் சில வருடங்கள் கடந்தால் "இதய வனம்" இயற்கை மற்றும் தற்சார்பு வாழ்க்கைக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: துரைக்கண்ணுவை வைத்து ரூ. 800 கோடி வசூலித்த அதிமுக - உதயநிதி ஸ்டாலின்