கோவையில் அமையவுள்ள கொடிசியா தொழிற் பூங்காவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய தொழில் நகரமாக கோவை திகழ்ந்து வருகிறது. கோவையில் மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. ஒரு வருடத்திற்குள் மெட்ரோ திட்டம் விரைவில் செயல்ப்படுத்தப்படும்.
விவசாயிகளின் கனவான அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை தொடங்க, இம்மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும். ஆயிரம் கோடி மதிப்பீட்டிற்கும் மேல் இத்திட்ட பணிகள் தொடங்கவுள்ளது என்று தெரிவித்தார்.
சிறு குறு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அதற்குறிய அதிகாரிகள் மற்றும் அமைச்சகர்களால் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
சாலை விரிவாக்க பணிகள் அதிகம் செயல்படுத்தி கொண்டு வருகிறோம். அதிலும் நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை இவை அனைத்தும் சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் நாட்டின் தொழில்வளம் பெருகும் என்று தெரிவித்தார்.
மேலும் தொழிற் பூங்கா உருவாக்குவது எவ்வளவு கடினமோ அதை விட கடினம் அரசியல் நடத்துவது என்றும், அரசியல் தலைவர்கள் சிலர் அவர்களது சுயநலத்திற்காக பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.