கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக தொடர் வதந்தி செய்திகள் பரவி வருகின்றன. 24/ 7 மணி நேரம் அனைவருக்கும் குடிநீர் வினியோகம் கிடைக்கும் என்றும் இதன் முதல் கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
தொடர்ந்து பேசுகையில், சூயஸ் நிறுவனம் குடிநீர் குழாய் பதிப்பு பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோக பணிகளை மட்டுமே மேற்கொள்ளும். குடிநீர் கட்டண நிர்ணயம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்றவற்றை கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வைத்து செயல்படும் எனக் கூறினார்.
மேலும், இத்திட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு குடிநீர் கட்டண நிர்ணய உரிமை மாநகராட்சியிடமே இருக்கும். 24-மணி நேரம் குடிநீர் திட்டம் 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. இவை நல்ல திட்டம் என்பதால் அதிமுக அரசு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தி வருகிறது. ஆர்எஸ் புரம் பகுதியில் முன்னோட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் குடிநீர் கட்டணம் உயராது என்றும் அவர் தெரிவித்தார்.