கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடக்க விருக்கும் திமுகவின் பூத் முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 24) சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
திமுகவின் கோவை மண்டல அளவிலான பூத் முகவர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூரில் இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்று உள்ளார். தமிழக ஏடிஜிபி அருண், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன், மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்,மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் விமான நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்றனர்.
இதையும் படிங்க: "மகளிர் இடஒதுக்கீடு... வரும் ஆனா வராது" - அமைச்சர் கீதா ஜீவன்!
சாலை பணிகளை ஆய்வு: இதனிடையே விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்ற முதலமைச்சர் விளாங்குறிச்சி பகுதியில் திடீரென சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அமைச்சர்கள் நேரு, பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலுக்கு முதலமைச்சர் செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்விற்கு பின்பு திருப்பூர் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மீண்டும் வாகனம் மூலம் கோவை விமான நிலையம் வரும் முதலமைச்சர் இன்று விமானத்தில் சென்னை திரும்புகிறார்.முதலமைச்சர் வருகையொட்டி கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: காவிரி நீர் வரும்.. ஆனா வராது.. - அமைச்சர் கீதா ஜீவனுக்கு பதிலடி கொடுத்த ஆளுநர் தமிழிசை!