கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் திமுக 14 வார்டுகளிலும். மனித நேய மக்கள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. திமுக பேரூர் கழக செயலாளர் ஆறுச்சாமியின் மகளான கவுன்சிலர் ராகினியை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்தது. இதற்கு அக்கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
திமுக கவுன்சிலர்கள் போட்டி
இந்நிலையில், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று (மார்ச் 4) நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் திமுக தலைமை அறிவித்த கவுன்சிலர் ராகினியும், போட்டி கவுன்சிலர் வனிதா ஜெயபால் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
அப்போது வனிதா ஜெயபால் 8 வாக்குகளும், ராகினி 7 வாக்குகளும் பெற்றனர். ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்ற வனிதா ஜெயபால் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
கவுன்சிலர்கள் தரப்பு இடையே பிரச்சனை
இதில், ஆத்திரமடைந்த ராகினி தரப்பு கவுன்சிலர்கள் வாக்குச்சீட்டுகளை பறித்துக் கொண்டு வெளியே சென்றனர். வனிதா ஜெயபால் தரப்பு கவுன்சிலர்கள் தாங்கள் தான் வெற்றி பெற்றோம், தங்களுக்கான சான்றிதழை கொடுங்கள் என்று கூறியவாறு சான்றிதழை எடுத்துக்கொண்டு வெளியே சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை அனுப்பும்படி உயர் அலுவலர்கள் உத்தரவிட்டனர். ஆனால், சிசிடிவி கேமரா காட்சிகளை எடுக்க முடியாமல் பேரூராட்சி அலுவலர்கள் தடுமாறினர்.
மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு
பேரூராட்சி அலுவலர்களின் குழப்பத்தால் அதிருப்தியடைந்த திமுகவின் இருதரப்பு கவுன்சிலர்களும், அவர்களது ஆதரவாளர்களும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருவாரூரில் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு