தொழிலதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மனைவி சாந்தாமணி மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யாவிடம் இன்று புகார் மனு அளித்தார். மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி சாந்தாமணி, பழனிசாமி மரணத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும், மார்ட்டின் நிறுவனத்தினருமே காரணமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பழனிசாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாகவும், ரெய்டு செய்யவந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தனது கணவரை விடிய, விடிய அடித்து துன்புறுத்தியதோடு, கழுத்தை நெறித்து ,கையை அறுத்ததாகவும் அவர் கூறினார்.
காவல்துறை அதிகாரிகள் 3 கோடி தருவதாக பேரம் பேசியதாக குற்றம்சாட்டிய அவர், தங்களது வீட்டை சீல் வைத்து விடுவேன் என காவல்துறை மிரட்டுகின்றனர் எனக்கூறினார். டி.எஸ்.பி மணி தங்களை மிரட்டுவதாகவும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தனது கணவர் மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை சொல்லியதால் தான், மார்ட்டின் நிறுவனத்தினர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார். மேலும் மார்ட்டின் நிறுவன ஊழியர்கள் கென்னடி, ராஜா, பிரகாஷ், வேதமுத்து ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். மார்ட்டின், அவரது மனைவி லீமாரோஸ், மார்டின் நிறுவனத்தினர் மீதும், வருமான வரித்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க போவதில்லை எனவும் அவர் கூறினார்.