பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாறன் (45), ரமேஷ் (40), முத்து (41), சவுண்டப்பன் (40). இவர்கள், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் தங்களது பணியை முடித்துவிட்டு அய்யம்பாளையத்தில் இருந்து ஜமீன் முத்தூர் நோக்கி சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, கோபாலபுரம் பகுதியிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று, திடீரென தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நான்கு பேர் மீதும் மோதியது.
இதில், மாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷ் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த முத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சவுண்டப்பன் பொள்ளாச்சி மறுத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொள்ளாச்சி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.