கோயம்புத்தூர்: காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
பொய்யான தகவல்
இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய மீனா ஜெயக்குமார், தனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்காமல் போனதற்குப் பொய்யான தகவலை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக் தலைமைக்கு கொடுத்ததுதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டிப் பேசினார்.
இந்த ஆள் யாரு?
"உன்னோட பொண்டாட்டிக்கு சீட் கிடைக்கணும் என்றால் கேட்டுட்டு போ, அதற்காக என்னோட வளர்ச்சியைத் தடுக்க இந்த ஆள் யாரு?" என மேடையில் செந்தில்பாலாஜி முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக்கிற்கு எதிராகக் காட்டமாகப் பேசினார். இதை திமுகவில் ஒரு தரப்பினர் கைத்தட்டி வரவேற்றனர்.
செந்தில்பாலாஜி சமரசம்
இதனிடையே பேச்சின் இடையே தலையிட்ட செந்தில்பாலாஜி, ஏதாவது புகார்கள் இருந்தால் கடிதமாகக் கொடுங்கள், தலைமையின் கவனத்திற்கு கொண்டுசெல்கிறேன் எனச் சமரசம் செய்தார். தொடர்ந்து மீனா ஜெயக்குமார் பேச முயன்றபொழுது கட்சி நிர்வாகிகள் அவரைப் பேச விடவில்லை. திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர். ராமச்சந்திரன் எழுந்துசென்று, மீனா ஜெயக்குமாரிடம் இனி பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
கோவை மாநகராட்சித் தேர்தலில் திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமாருக்குப் போட்டியிட சீட் கிடைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக தலைமை வெளியிட்ட பட்டியலில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அதிமுக தலைவர்களை ஒடுக்க நினைக்கும் பாசிச திமுக அரசு!'