கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயுர்வேத மையம் ஒன்று இயங்கி வருகிறது. துடியலூர் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் கிஷோர், முதல் நிலைக்காவலர் ஜோதிமணி அப்பகுதியில் பணியாற்றி வருகின்றனர். தலைமைக் காவலர் உட்பட இருவர் ஆயுர்வேத மையத்துக்குச் சென்று, தங்களுக்கு வாரந்தோறும் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக தர வேண்டும். இல்லையெனில் இங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதாக வழக்குப் பதிந்துவிடுவோம் என சில மாதங்களுக்கு முன்னர் மிரட்டியுள்ளனர்.
இதனால், பயந்துபோன ஆயுர்வேத மைய உரிமையாளர் வாரந்தோறும் தலைமைக்காவலர் கிஷோருக்கு 20 ஆயிரம், ஜோதிமணிக்கு 5 ஆயிரம் வழங்கி வந்துள்ளார்.
தொடர்ந்து, இதேபோல் லஞ்சம் வாங்கி வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஆயுர்வேத மையத்தின் உரிமையாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம் புகார் செய்தார்.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், காவலர்கள் இருவரும் வாரந்தோறும் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், தலைமைக் காவலர் உட்பட இருவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.