கோவை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலிவுட் திரைப்பட நடிகரும் சென்னையின் எஃப்.சி. கால்பந்து அணியின் உரிமையாளருமான அபிஷேக் பச்சன் கலந்துகொண்டார். பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலளித்தார்.
இதனையடுத்து அவர் மாணவர்களுடன் இணைந்து நடனமும் ஆடினார். இதில் சென்னையின் எஃப்.சி. கால்பந்து அணியின் வீரர்கள் எட்வின் சிட்னி, அனிருத் தபா, மசிஹ் சைகானி ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது மாணவர்களிடம் பேசிய அபிஷேக் பச்சன், சென்னையின் எஃப்.சி. அணி தமிழ்நாட்டின் அணி ஆகும். இந்த அணிக்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், பள்ளி மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அபிஷேக் பச்சன், பள்ளிப் பருவம் என்பது ஆனந்தமான பருவம் என்றும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் பச்சன், இந்திய நாடு கிரிக்கெட் விளையாட்டை அதிகம் நேசிக்கும் நாடு. தற்போது இங்கு மற்ற விளையாட்டுகளுக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. கிரிக்கெட் போட்டியைத் தாண்டி கபடி, கைப்பந்து, ஹாக்கி போன்ற பல விளையாட்டுகள் உள்ளன. அது தற்போதுதான் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.
இறுதியில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அபிஷேக் பச்சன், அரசியலில் தான் இல்லை என்றும் நடிகனாக இருப்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’ஐ எம் ஏ பேட் காப்’ - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’தர்பார்’ ட்ரெய்லர்!