கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரைச் சேர்ந்தவர் அம்சவேல். இவரது மகன் புருஷோத்தமன் (19) ,பொள்ளாச்சியில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்துவந்தார். கடந்த மார்ச் 7ஆம் தேதி ஆனைமலையில் உள்ள தனது நண்பர் உதயகுமாரை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு, புதிதாக வாங்கிய விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை ஒட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் புருஷோத்தமன் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் புருஷோத்தமன் செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இதுகுறித்து அம்சவேல் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கிபாளையம் காவல் துறையினர், புருஷோத்தமனை தேடிவந்தனர்.
இந்நிலையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பணத்தகராறில், உதயகுமார் புருஷோத்தமனை காண்டூர் கால்வாயில் தள்ளியது தெரியவந்தது. தலைமறைவான உதயகுமாரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மார்ச் 13ஆம் தேதி சிறையில் அடைத்தனர்.
மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட புருஷோத்தமனின் உடலை தேடும் பணியில் காவல் துறையினர் இறங்கினர். இந்நிலையில், காண்டூர் கால்வாயில் புருஷோத்தமனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடற்கூராய்வுக்காக புருஷோத்தமன் உடலை காவல் துறையினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சரின் சிடி வழக்கு: குரல் மாதிரிகளை சேகரித்த சிறப்பு புலனாய்வு குழு