கோயம்புத்தூர்: பாஜக சார்பில் மக்கள் ஆசிர்வாத யாத்திரை இன்று (ஆக 16) முதல் தொடங்கியது.
தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ள இந்த யாத்திரையை, கோயம்புத்தூரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
இதன்தொடக்கவிழா நிகழ்ச்சி கோயம்புத்தூர் வடக்குப்பகுதியில் காமராஜர் நகரில் நடைபெற்றது. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேடையில் சிறப்புரையாற்றினார்.
பதவி கொடுத்து அழகு பார்த்தவர் மோடி
அப்போது எல்.முருகன் பேசியதாவது, 'அருந்ததியர் சமூகத்தில் பிறந்த என்னை இணை அமைச்சராகப் பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்தவர், பிரதமர் மோடி. இதனை எந்த அரசியல் கட்சியும் செய்ததில்லை.
செருப்பு தைக்கும் குடும்பத்தைச் சேர்ந்த என்னை மாநிலத் தலைவராக்கியது, பாஜக.
பாஜக ஆட்சியில் தான் இந்தியாவில் அனைத்து இல்லங்களுக்கும் கழிப்பறை கட்டி தரப்பட்டது. சமூக நீதியைப் போற்றுகிறவர், பிரதமர் மோடி.
மத்திய அமைச்சரவையில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 12 பேர், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 பேர், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 28 பேரும் அமைச்சர்களாக உள்ளனர். மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரை திட்டமிடப்பட்டு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது' என்றார்.
ஜனநாயக மாண்பை குலைத்தது எதிர்க்கட்சி
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதன்முறையாக மக்கள் ஆசிர்வாத யாத்திரையை தொடங்கி இருக்கின்றோம். தமிழ்நாட்டில் தமிழர்களின் நலன், பாரம்பரியம் ஆகியவற்றை பேணுவதில் பாஜக என்றும் முன்னிலையில் உள்ளது.
சமூக நீதியைப் போற்றுவதில் பாஜகவிற்கு ஈடு இணை யாரும் இல்லை. கம்யூனிஸ்ட், திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஏழை, எளிய சமூகத்தைச் சார்ந்த எங்களை அறிமுகப்படுத்தக் கூடாது என்று எண்ணினர். மக்களவை ஜனநாயக மாண்பை குலைத்தது எதிர்க்கட்சிகள்.
மக்களவை வரலாற்றில் இல்லாத அளவு வன்முறையைத் தூண்டியுள்ளனர், எதிர்க்கட்சிகள். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யவில்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது தான்' என்று கூறினார்.
பெரும் வரவேற்பு
இதனைத்தொடர்ந்து யாத்திரை தொடங்கப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பூ உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த, மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு, பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் கோவை கோணியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அர்ச்சகர் திட்டத்துக்கு எதிராக 2 வழக்குகள் - வழக்குகளை இணைத்து விசாரிக்க உத்தரவு