கோயம்புத்தூர்: “திமுக கட்சியைச் சுக்கு நூறாக்கி மூட்டை கட்டி கடலில் வீச உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “தென் மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்தனர். மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தி.மு.க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், மத்தியக்குழு கடந்த 20ஆம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர். மத்திய அரசு ஆய்வு மேற்கொண்ட பின்னர் கடந்த 21ஆம் தேதி முதலமைச்சர் வெள்ள பாதிப்பைப் பார்வையிடத் தூத்துக்குடி சென்றுள்ளார்.
மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மழை வெள்ள பாதிப்பு பணியில் அவர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆனால், சேலத்தில் இளைஞரணி மாநாடு மற்றும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதில் கவனம் செலுத்திவிட்டு, நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். மக்களைக் காப்பதை விட மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதில் தி.மு.க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை மறுநாள் (டிச.26) தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு வருகிறார். மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தி.மு.க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மத்திய அரசு இந்த பணிகளைச் செய்து வருகிறது.
மேலும், சென்னை வெள்ளத்திற்கு ரூ.450 கோடி, ரூ.550 கோடி என மொத்தம் ரூ.1000 கோடியை மத்திய அரசு தமிழக அரசுக்குக் கொடுத்துள்ளது. தென் மாவட்ட வெள்ளத்தை ஆய்வு செய்து, தமிழக அரசு அறிக்கை கொடுத்த பின்னர், அதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கும். தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க மறுப்பதாகவும், குறைவாகக் கொடுப்பதாகவும் திமுக கூறி வருகிறது. அப்படி மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை. எந்த மாநிலமாக இருந்தாலும் சேதத்தின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.
பா.ஜ.க ஆட்சி நடக்கும் குஜராத்தில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் பாதிப்பிற்கு ரூ. 9 ஆயிரத்து 836 கோடி கேட்டார்கள். மத்திய அரசு உடனடி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி கொடுத்துள்ளது. கரோனா காலகட்டத்தில் குஜராத்திற்கு மொத்தமாக ரூ.304 கோடி ரூபாயும், தமிழகத்திற்கு ரூ. 868 கோடி வழங்கப்பட்டது.
திமுகவை இந்தி கூட்டணியில் நீடிக்கவிட்டால் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய 30, 40 சீட்டுகளும் கிடைக்காது என நினைத்து, முதலமைச்சர் ஸ்டாலினையும், டி.ஆர் பாலுவையும் இந்தி படித்துவிட்டு வர அனுப்பினார் நிதிஷ்குமார். நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் திமுகவை இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியை வைத்து வகுப்பெடுத்து அனுப்பியுள்ளார்.
இந்தியாவில், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் என 4 ஜாதிகள் உள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழகத்தில் ஏழை என்ற சாதி இருக்கக் கூடாது என்பது பாஜகவின் நிலைப்பாடு. உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை திமுக கட்சியை மூட்டை கட்டி கடலில் வீச முடிவு செய்துவிட்டார். 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திமுக கட்சியை உதயநிதி ஸ்டாலின் மொத்தமாக உடைத்து சுக்கு நூறாக எறிவதற்காக வந்திருக்கிறார்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: டிச.26-இல் தூத்துக்குடி வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!