கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " நாட்டில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னைகள் பல மத்திய பாஜக அரசால் தீர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக ராமர் கோயில் விவகாரம், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கம், இஸ்லாமியர்களின் முத்தலாக் முறை போன்றவற்றைக் கூறலாம்.
ஊரடங்கு காலத்தில் மக்களின் தேவைக்காக 1.75 லட்சம் கோடி ரூபாய் நிவாரணமாக அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 35 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமர் நிவாரண திட்டத்தின் மூலம் தலா 2 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கும் பொருள்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட வேண்டும் என்பதே எங்களின்(பாஜக) நோக்கம். எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது. இதில் மத்திய அரசிற்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் அதிகளவு பரவ தப்லிக் ஜமாத் கூட்டம்தான் அதி முக்கிய காரணமாக உள்ளது. நாட்டில் மத்திய அரசு தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
சாத்தான் குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மட்டும் கண்டிக்க வேண்டும். சில காவலர்களைக் கொண்டு அனைத்து காவல் துறையினரையும் மக்கள் தவறாக எண்ணக் கூடாது” என்றார்.