கோவை மாவட்டம் துடியலூருக்கு வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றக் கோரி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். காவல்துறையினர் அங்கு இருந்தவர்களைக் கொண்டு பிளக்ஸ் பேனர்களை அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை அகற்றி ஓரத்தில் வைத்தனர். அப்போது அந்த பேனரை டிராபிக் இராமசாமி கிழித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்த பாஜக, இந்து முன்னணியை சேர்ந்தோர் டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட காரில் ஏறிய டிராபிக் ராமசாமியை முற்றுகையிட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட முற்பட்டனர்.
அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர், முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி டிராபிக் ராமசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.