கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலானது இரண்டு மாவட்டங்களில் பரவிவருகிறது. இதனால், அம்மாநில அரசானது 40 ஆயிரம் கோழிகள், வாத்துக்களை அழிக்க முடிவு செய்துள்ளது. அதுபோல மற்றப் பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க நடவடிக்கையும் எடுத்துவருகிறது.
கேரள மாநிலத்தின் அண்டை மாநிலமாக, தமிழ்நாடு இருப்பதால் கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குப் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழ்நாடு அரசானது தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புனி, ஜமீன்காளியாபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் கேரளாவில் இருந்துவரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
மேலும், கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள் ஏற்றிவரும் வாகனங்களைத் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காமல் கால்நடைத்துறை அலுவலர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக அளவில் கோழிகளும், முட்டைகளும் கேரளாவிற்குச் செல்லும். ஆனால், கேரள எல்லையோரத்தில் உள்ள பண்ணைகளில் இருந்து கோழிகள், முட்டைகள் தமிழ்நாட்டிற்கு எப்போதாவது வரும் எனவும்; வாகனங்களுக்கு முன் எச்சரிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும் கால்நடைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கேரள அரசுப்பேருந்து ஊழியர்கள் சுற்றுப்பயணம்