கேரளாவில் பறவை காய்ச்சல் நோயானது தீவிரமடைந்துள்ளது. அங்குள்ள கோழி, வாத்து பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் உயிரிழந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவிலிருந்து வரும் அனைத்து வழித்தடங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்த கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் உத்திரவிட்டுள்ளார்.
கண்காணிப்பு
அந்த வகையில், கேரளாவிலிருந்து தமிழ்நாடு வரும் முக்கிய வழித்தடங்களான கோவை மாவட்டத்தில் உள்ள 12 வழித்தடங்களிலும் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை முதல் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கேரளாவிலிருந்து கோவை வரும் முக்கிய வழித்தடமான வாளையாறு சோதனைச்சாவடி அருகே தற்காலிகச் சோதனைச்சாவடி அமைத்து கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் இன்று காலை முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கிருமிநாசினி தெளிப்பு
கோவை மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி தலைமையில், அலுவலர்கள் இந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதுடன், கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியினையும் துரிதப்படுத்திவருகின்றனர்.
தடை
இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கூறுகையில், "தமிழ்நாட்டிலிருந்து கோழி, முட்டை போன்றவற்றை கேரளாவிற்கு எடுத்துச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.
அதே வேளையில் கேரளாவிலிருந்து வரும் கோழி, தீவனம் உள்பட பண்ணை தொடர்பான பொருள்கள் எதுவும் அனுமதிக்கப்படுவது இல்லை. அப்படி ஏதேனும் வந்தால் அந்த வாகனத்தைத் திருப்பி அனுப்பப்பட்டுவருகிறது" என்றனர்.
இதையும் படிங்க: பறவைக்காய்ச்சல் பரவியதாக வதந்தி: பண்ணைகளில் அலுவலர்கள் ஆய்வு