கோவை: போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (ஏப்ரல் 30) சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் பெருமாள் கோவில் அருகே தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ராய் (28) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 2.500 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் 1.1.2023 முதல் தற்போது வரை காவல் துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 196 நபர்கள் மீது 146 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 427 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று 'போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இத்தகைய சட்ட விரோத செயல்பாடுகள் நடந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், அவ்வாறு தகவல் தெரிவிப்போர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 12 மாட்டு வண்டியில் சீர்.. மருமகளை திக்கு முக்காட வைத்த தாய்மாமன்!