கோவை: ரேஸ் கோர்ஸ் பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் கனக சபாபதி, "நேற்று (ஜூலை. 26) தமிழ்நாடு அரசு வன்னியர் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இது அதிமுக, திமுக அரசுகள் வன்னியர்களுக்கு அறிவிக்கும் 7ஆவது அல்லது 8ஆவது அரசாணையாகும்.
1989ஆம் ஆண்டு வரை 50 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அதிலிருந்து 20 விழுக்காட்டை வன்னியர்களுக்கு மட்டும் கொடுத்துள்ளனர்.
வன்னியர் அல்லாத 5 கோடி மக்கள் பாதிப்பு
மீதமுள்ள 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு இஸ்லாமியர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதனால் 26.5 விழுக்காடு இதர 137 சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வன்னியர்கள் இல்லாத 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்க பலமுறை கடிதங்கள் கொடுத்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு அரசு வன்னியர்களுக்கு அதிமுக அரசு ஒதுக்கிய 10.5 விழுக்காடு இட ஒதுகீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலரும் புறம் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அச்சமூகத்தை சேர்ந்த இளைஞர்களின் கல்வி வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சமூகத்தினர் கூறுவதை மட்டுமே 30 ஆண்டுகளாக அரசாங்கங்கள் கேட்டு வருகின்றன.
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் பொழுதே இதுபோன்ற அறிவிப்பால் இந்தச் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் பறிபோயுள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதனை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் வரும் காலங்களில் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம்.
30 ஆண்டுகளாக இது தொடர்கதையாக இருந்துவருகிறது. இதில் அதிமுக, திமுக இரண்டு அரசுகளும் சமூகநீதியை கடைப்பிடிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு- ஜி.கே மணி கோரிக்கை