கோவை: சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே, திங்கள்கிழமை (செப்டம்பர் 8) காலை சாலையில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தனர்.
அப்போது சம்பவத்தன்று காலை 5.45 மணி அளவில், கார் ஒன்றில் இழுத்துவரப்பட்ட உடல் சாலையில் விழுந்து வாகனங்கள் ஏறி உருக்குலைந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பரவி வைரலாகின்றன.
உயிரிழப்பு காரணம் கண்டறிய தீவிர விசாரணை
பின்னர் விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல் துறையினர், பெண்ணின் உடலை வீசிச்சென்ற கார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதனைக் கண்டறிந்தனர். இதனையடுத்து வாகன உரிமையாளர் தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற, வாகன பதிவு எண் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் சாலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் இன்று உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ஆய்வில் உயிரிழந்த பெண்ணுக்கு 65 வயது இருக்கலாம் எனவும், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் வேறு ஏதும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது பெண்ணின் மரணத்துக்கான காரணம் குறித்து கண்டறிய, 2 தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து: ஒருவர் மரணம்