ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை வனச்சரகர் சக்தி கணேஷ். கடந்த 12ஆம் தேதி சொந்த ஊர் ஆரணிக்கு மாறுதல் பெற்று சென்றார். இவர் வால்பாறையில் பணியில் இருந்தபோது தனியார் எஸ்டேட்டில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, குத்தகைதாரர் உத்தரசாமி வெட்டப்பட்ட மரங்களை தனது சொந்த இடத்துக்கு கொண்டு செல்ல வனச்சரகர் சக்திகணேஷிடம் அனுமதி கோரியுள்ளார்.
இதற்கு, உத்தரசாமியிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் வால்பாறை வனச்சரகர் சக்தி கணேஷ், பணிமாறுதல் செய்யப்பட்டு அட்டகட்டியில் உள்ள வன அலுவலர் பயிற்சி மையத்துக்கு மாற்றப்பட்டார். பணிமாறுதல் பெற்ற பின்பும் சக்தி கணேஷ் குத்தகைதாரர் உத்திரசாமியிடம் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில், ஒப்பந்ததாரர் உத்திரசாமி கோவை லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் நேற்று காலை புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.ராஜேஷ் தலைமையில் ஆய்வாளர் பிரபுதாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வனச்சரகர் சக்தி கணேஷ் அட்டக்கட்டியில் உத்திரசாமியிடம் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிப்பட்டார். இந்த சூழலில் சக்தி கணேஷ் சர்க்கரை நோய் காரணமாக உடல்நிலையில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உயர் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.