கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கோவை வழியாக நாள்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மதுக்கரைப் பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வனப்பகுதி வழியாக இரண்டு ரயில் பாதைகள் செல்கின்றன.
இதில் முதல் ரயில் பாதையான A லைன் 17 கிலோ மீட்டர் தொலைவும், இரண்டாவது ரயில் பாதையான B லைன் 23 கிலோ மீட்டர் தொலைவும் கொண்டது. இந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனத்தில் இருந்து யானைகள் வெளியேறி ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் 6 முறை யானைகள் ரயில் விபத்துகளில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 11 காட்டு யானைகள் உயிரிழந்து உள்ளன. இதனால் காட்டு யானைகள் ரயில் விபத்துகளில் உயிரிழப்பதைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது.
வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ரயில் பாதையில் ரயிலை வேகமாக இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இரவு நேரங்களில் ரயில்களை அதிவேகமாக இயக்க வேண்டிய சூழ்நிலை வருவதால் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் சமீப காலமாக நடைபெற்று வந்தன.
தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. செயற்கை நுண்ணறிவு கேமராக்களை (AI ) ரயில் பாதையில் பொருத்தப்பட்டு, காட்டு யானைகளின் நடமாட்டம் இருக்கும் போது அவற்றை படம் பிடிப்பதுடன், யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறை மற்றும் ரயில்வே துறைக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், சைரன் மூலம் எச்சரிக்கை வழங்கும் வகையிலும் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மதுக்கரை வனப்பகுதியில் உள்ள இரு ரயில் பாதைகளில் 12 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு சோதனை அடிப்படையில் கண்காணிப்பு பணிகள் துவங்கி உள்ளன. யானைகள் ரயில் பாதைகளின் அருகில் வரும் போது தெர்மல் இமேஜிங் அம்சத்துடன் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, அதற்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் யானைகள் உயிரிழப்பை தடுத்து காப்பாற்ற முடியும் என கூறப்படுகிறது.
தற்போது சோதனை அடிப்படையில் இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"சுடுகாடு கூரை அமைப்பதில் முறைகேடு; உள்நோக்கத்தோடு அரசாணை வெளியிடப்பட்டது" - நீதிமன்றம் கருத்து