பாரதியார் பல்கலைக்கழகத்தின் 3, 5ஆம் பருவத் தேர்வுகள், விடுபட்ட பாடங்களுக்கான - அரியர் தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"உயர் கல்வித்துறையின் வழிகாட்டுதலை அடுத்து பல்கலைக்கழக துறைகள், இணைவு பெற்ற கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மாணவர்களின் 3, 5ஆம் பருவ எழுத்துத் தேர்வுகள், அரியர் தேர்வுகளை வரும் 23ஆம் தேதி முதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வுகள் அனைத்தும் இணைய வழியில் நடைபெறும். இதற்காக பல்கலைக்கழகம் தனி இணையதள பக்கத்தை உருவாக்கியுள்ளது. தேர்வு நாளன்று அதில் பதிவேற்றம் செய்யப்படும் கேள்வித் தாளை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் தேர்வு எழுதி, பின்னர் அன்றைய தினமே விடைத்தாளை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தத் தேர்வுக்காக பதிவு செய்திருக்கும் இணைப்புக் கல்லூரிகளின் மாணவ-மாணவிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களை தொடர்புகொள்ள வேண்டும். பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களை தொடர்புகொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.