கோயம்புத்தூர்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் பயன் பெற, விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல் சமயத்தின்போது தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
இதற்கான முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் வருகின்ற 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட முகாமானது ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் கட்டமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 212 நியாய விலைக் கடைகளிலும், அனைத்து வருவாய் வட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சிப் பகுதிகளில் 584 நியாய விலைக் கடைகளிலும் வால்பாறை நகராட்சிப்பகுதியில் உள்ள 43 நியாய விலைக்கடைகளிலும் முகாம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தியேட்டர் டிக்கெட் கட்டண விவகாரம்… விஜய் ஆண்டனி கூறிய ஐடியா என்ன?
இரண்டாம் கட்டமாக மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 253 நியாய விலைக் கடைகள், அனைத்து பேரூராட்சி பகுதிகளில் உள்ள 206 நியாய விலைக்கடைகள் வால்பாறை நகராட்சி தவிர்த்து அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் உள்ள 103 நியாயவிலைக்கடைகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விண்ணப்ப பதிவானது ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.
விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்பதற்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். நகல்கள் இணைக்கத் தேவையில்லை. மேலும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு அவர்களின் கைவிரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும்.
விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக OTP பெறப்படும். இதற்கு 2022 செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Tambaram: பள்ளி வேன் மோதி ஆசிரியை உயிரிழப்பு; பள்ளங்கள் மூடப்படாததும் காரணமா?