Leopards Spotted At Residential Areas In Coimbatore: கோவை அடுத்த மதுக்கரை பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இதனைச் சுற்றியுள்ள பிள்ளையார்புரம், சுகுணாபுரம், செந்தமிழ் நகர் ஆகியப் பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள சிறு குன்றில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சிறுத்தை தென்பட்டு வருகிறது.
மாலை நேரங்களில் குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள பாறை மீது ஓய்வெடுப்பதும் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடியும் வருகிறது.
இதனையடுத்து அந்த சிறுத்தையைப் பிடிக்க இரு வாரங்களுக்கு முன்னர் அங்கு கூண்டு வைக்கப்பட்டது. எனினும், அந்த கூண்டில் இதுவரை சிக்காமல் சிறுத்தைப் போக்குக்காட்டி வருகிறது. கடந்த இரு தினங்களில் இரண்டு வளர்ப்பு நாய்களை வேட்டையாடிய சிறுத்தை இன்று (டிசம்பர் 30) அதிகாலை செந்தமிழ் நகரில் அந்தோணி என்பவரது வீட்டுக்குள் புகுந்து வெளிநாட்டு வகை நாய் ஒன்றை வேட்டையாட முயன்றது.
நாயின் சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது நாயுடன் சண்டையிட்ட சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இதனையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்ட நிலையில் தன்னாட்சி அப்பன் கோயில் கரடு பகுதியில் மேலும் ஒரு கூண்டு இன்று காலை வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அஜித்தின் வலிமை ட்ரெய்லர் வெளியீடு!