கொங்கு பகுதியை ஆண்ட சகோதரர்களான பொன்னர் - சங்கர் மற்றும் அருக்காணி ஆகியோர் தெய்வமாக, கொங்கு வட்டாரத்தில் வணங்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கை கதையை கேட்பது புண்ணியம் என கருதப்படுகிறது. அவர்களின் கதை, காலம் காலமாக கிராமியப்பாடல் வடிவில் மக்களிடையே சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம், நெகமம் கப்பளாங்கரை முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் அண்ணன்மார் கதையில் பொன்னர்-சங்கர் வழிபாட்டு கதை உடுக்கை அடி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த கிராமிய கதைப்பாட்டு கலைஞர் டாக்டர் சீத்தாராமன், சிவக்குமார், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு உடுக்கையடித்து பொன்னர்-சங்கர் கிராமிய கதையை பாடலாக படித்தனர்.
இதில் கிராமிய கலைஞர்கள் அண்ணன்மார் கதை பாடலை உடுக்கை அடித்து பாடியபோது ஏராளமான பெண்கள் சாமி அருள் வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் கண்கள் கலங்கியபடி பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் கப்பளாங்கரை, செட்டிபுதூர், கே.வி.கே.நகர், சேரிபாளையம், குருவேகவுண்டன்பாளையம், தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், செட்டியக்காபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், சிறுக்களந்தை, ஜக்கார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.