கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலுக்குச் சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில், உள்ளூர் மற்றும் வெளி ஊர்களிலிருந்தும், அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
மேலும், கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. கனமழை காரணமாக, பல ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற நீர்நிலைகள் நிரம்பின. இதனால், அணைகளில் இருந்து நீரானது திறந்து விடப்பட்டது.
அந்த வகையில், திருமூர்த்தி அணையில் இருந்து பாலாற்றுக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் ஆற்றின் மையப்பகுதியில் இருப்பதால், கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது.
இதனால், பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்ல தடை விதித்துள்ளது. மேலும் நீர்வரத்து குறைந்தவுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் 10 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன்னாள் கால்பந்து வீரர் ஓலே குன்னர் சோல்ஸ்கேர் இந்தியச் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு..!