கோவை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் இன்று(ஜூலை 9)செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "கொங்கு மண்டலத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் முழுமை அடைய வேண்டும். இதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள நீர் பாசனத் திட்டங்கள், நீர் மேலாண்மைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உலகத்தில் சராசரி வெப்பநிலை 17.2 டிகிரி சென்டிகிரேட். இந்த ஜூலை மாதம் 3,4,5ஆம் தேதிகளில் சராசரி வெப்பமடைந்த நாளாக இருக்கிறது. இதனால், மிகப்பெரிய இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறோம். எனவே, இந்த நீர் மேலாண்மைத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், அதற்கு நிதி ஒதுக்க வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கிட்டத்தட்ட 98.2 விழுக்காடு, 98.5 விழுக்காடு என்றெல்லாம் போய்க் கொண்டிருக்கிறார்கள். 62 ஆண்டு கால கனவு அது, அதனை முடிக்க வேண்டும்.
கீழ்பவானி வாய்க்கால் திட்டத்திற்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும். இதில் அரசியல் இருக்கக் கூடாது. நீர் மேலாண்மைக்கும் நீர் பாசன திட்டங்களுக்கும் அரசியல் தேவையில்லாத ஒன்று. நீரை ஒரு நல்ல மேலாண்மையைக் கொண்டு பாதுகாத்து பயன்படுத்த வேண்டும்.
மேகதாது அணை கட்டுவோம், நிலத்தைக் கையகப்படுத்த அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை கட்ட முடியாது என்று அவர்களுக்கும் தெரியும், அங்கு இருக்கக்கூடிய கர்நாடக மக்களைத் தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்ற ஒரு சூழலை உருவாக்கும் ஒரு பேச்சாக அதனை நான் பார்க்கின்றேன். காவிரி படுகையில் எந்தவித கட்டுமானங்களும் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கட்டக்கூடாது என்று தீர்ப்புகள் கூறியிருக்கின்றன. இருந்தாலும், அவர்கள் அணை கட்டுவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம், 50 ஆண்டுகால திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்காதது தான். தெலங்கானா லட்சக்கணக்கான கோடி நீர் மேலாண்மைக்காக ஒதுக்கி பணிகளை செய்து வருகிறார்கள், ஆந்திரா ஆயிரக்கணக்கான கோடிகளை இதற்கு செலவு செய்கிறது, இதே போல மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகியவை லட்சக்கணக்கான கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்த 50 ஆண்டுகாலம் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய, இவர்கள் நீர் மேலாண்மைக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால்தான் இத்தகைய பிரச்னைகளில் நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் ஒவ்வொரு 10 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். காவிரி ஆற்றில் மட்டும் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டினால் 170 டிஎம்சி வரை தண்ணீரை சேமிக்கலாம். கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பணை கட்ட வேண்டும் என பாமக வலியுறுத்தினால் அரசு 10 குவாரிகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளது. தடுப்பணை கட்டினால் மணல் எடுக்க முடியாது என்பதால், அதனை கட்டவில்லை. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனப் பகுதிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டது, அண்மையில் கூட யானை மிதித்து ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து விலைவாசி உயர்வு குறித்து பேசிய அவர், "விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியது ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு வீடுகளுக்கும் அவரை நேரில் அழைத்துச் செல்கிறேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவரே நேரடியாக கேட்கட்டும். தக்காளி விலை கடந்த மாதம் மிகக் குறைவாக இருந்த நேரத்தில் அரசு குளிர்பதனக் கிடங்குகள் அமைத்து இருந்தால், தற்போது அதனை சேமித்து வைத்து குறைந்த விலைக்கு தக்காளிகளை விற்பனை செய்திருக்கலாம். எட்டு கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் தமிழக அரசு வெறும் 150 தக்காளி விற்பனை மையங்களை மட்டும் திறந்தால், அது போதுமானதா?" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "மதுவை திணிக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த செந்தில் பாலாஜிக்கு மாற்றாக தற்போது அமைச்சர் முத்துசாமி அந்தத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு சமூக அக்கறை உண்டு என்பதால், அதில் சீர்திருத்தம் செய்வார் என்று நம்புகிறேன். எங்கு பார்த்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் மது கிடைக்கும் நிலை உள்ளது. தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் 65 கடைகளை மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் மூடி இருக்கிறது.
அனுமதி உடன் 4,700 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 25 ஆயிரம் கடைகள் செயல்படுகின்றன. சிறைச்சாலைகளில் போதைப்பொருட்கள் புழங்குகின்றன. அனைத்து இடங்களிலும் தங்கு தடை இன்றி கஞ்சா புழக்கம் இருக்கிறது. முதலமைச்சரிடம் இது குறித்து நேரடியாக பலமுறை சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மேற்கு மண்டல காவல்துறை டிஐஜி தற்கொலை சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து முழுமையாக அறிவிப்பு வெளியிட வேண்டும். கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடக்க இருப்பது அரசியல் கூட்டம் என்பதால், அதில் முதல்வர் கலந்து கொள்வது வேறு, ஆனால் அங்கு மேகதாது அணை பிரச்சனை பற்றி அவர் பேச வேண்டும். அதேபோல் சட்டம் ஒழுங்கு பாதித்தால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று தேர்தல் அறிக்கையில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுப்போம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. அதிமுக மதுரை மாநாட்டிற்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் எனக் கூறுவது அவர்களது தொண்டர்களை உற்சாகப்படுத்த மட்டுமே. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் முதலமைச்சரும் ஆளுநரும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நல்லது நடக்கும். ஆளுநர்கள் நீதிபதிகளைப் போல் என்பதால் அவர்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும், அரசியல் பேசக்கூடாது" என்றார்.
அதைத் தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தை பார்த்தீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "இதுவரை பார்க்கவில்லை, அதற்கான நேரம் இல்லை" என்றார்.
அதில் சாதிய கருத்துகள் இருப்பதால் பார்க்கவில்லையா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "பாமக சாதியக் கட்சி இல்லை. தலித் ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பாமக மட்டுமே. திமுக வழங்கியதா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், பத்திரிகையாளர்கள் வன்மத்துடன் கேள்வி எழுப்பக் கூடாது என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மாமன்னன் வசூல் எவ்வளவு? - வெற்றிவிழா மேடையில் போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்!