கோயம்புத்தூர்: விளையாட்டு, கலை, இலக்கியம் என அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் சாதித்து வருகின்றனர். அதிலும் குடும்ப சூழல், வறுமை காரணமாக பெண்கள் தங்களுடைய பல்வேறு திறமைகளை வெளிக் கொண்டு வராமல் அவர்களுக்குள்ளாகவே புதைத்து வைத்துக் கொள்கின்றனர்.
அப்படிப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு சிலர் உதவி வந்தாலும், அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் அந்த வகையில் கோவையை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் விமன் பிட்னெஸ் மாடலாக தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதித்து வருகிறார்.
கோவை - சத்தியமங்கலம் சாலையில் உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(37). இரு குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஒன்றில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் தமிழ்ச்செல்விக்கு உடல் எடை கூட ஆரம்பித்துள்ளது.
இதனை குறைக்க உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அவர் அங்கு தனது உடலை வருத்தி எடையை குறைத்துள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அளித்த உத்வேகத்தாலும், தொடர் உடற்பயிற்சியின் பலனாலும் இரண்டு ஆண்டுகளில் ”விமன் பிட்னெஸ் மாடலாக” மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ’வேர்ல்ட் பிட்னெஸ் பெடரேஷன் ஆப் இந்தியா’ சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் வென்றதன் மூலம் தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண்ணாக பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் வேர்ல்ட் பிட்னெஸ் பெடரேஷன் சார்பில் வியட்நாமில் ’விமன்ஸ் பிட்னெஸ் மாடல்’ போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழ்ச்செல்வி காலை,மாலை என இரு வேளைகளிலும் தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார்.
இது குறித்து தமிழ்ச்செல்வி கூறுகையில், ”இரண்டு குழந்தைகளுக்கு தாயான தான் கடினமான உடற்பயிற்சி மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் சாதித்து வந்தாலும் அதனை ஊக்குவிக்க யாரும் முன் வரவில்லை. மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கும் ஆதரவை இதில் காட்டுவதில்லை. மற்ற போட்டிகளுக்கு அரசு உதவுவது போல் இது போன்ற போட்டிகளுக்கு உதவினால் என்னை போன்ற ஏராளமான பெண்கள் இதில் ஆர்வம் செலுத்துவார்கள்.
எனது குடும்ப சூழல் காரணமாக வியட்நாமில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள பயணச்செலவு, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு பணமின்றி தவித்து வருகிறேன். எனவே தமிழக அரசு இப்போட்டியில் கலந்து கொள்ள உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நிச்சயம் உலக அளவில் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்” என தமிழ்ச்செல்வி நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: சர்வதேச புலிகள் தினம்: காட்டின் பாதுகாவலனை காத்திடுவோம்..