கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளது. யானையின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், தடாகம், தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது, மாங்கரை பகுதி. இந்தப் பகுதியில் யானைகளின் நடமாட்டம் சற்று அதிகரித்துக் காணப்படும். காலநிலை மாற்றத்தினாலும், உணவு தட்டுப்பாட்டினாலும் அவ்வப்போது, தமிழகத்தில் இருந்து கேரள வனப்பகுதிக்கும், கேரளாவில் இருந்து தமிழக வனப்பகுதிக்கும் யானைகள் வலசையாக செல்வது நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: மரக்கிளையால் அங்கன்வாடி மையத்திற்கு ஆபத்து! அசம்பாவிதம் ஏற்படும் முன் அகற்ற கோரிக்கை!
இதன் காரணமாகவே தடாகம் பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் சற்று அதிகரித்தே காணப்படும். இந்நிலையில் கோவை வனத்துறையினர் வழக்கம்போல், வனவிலங்குகளின் நடமாட்டங்கள் குறித்து, தடாகம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடாகம் பகுதியில், வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் நிலத்தில் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததனர். இதன் பேரில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையிலான வனத்துறையினர், அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் உயிரிழந்த யானைக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: Nilgiri Elephant: வாகனத்தை விரட்டிய யானைக்க்கூட்டம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
இதுகுறித்து வனத்துறை மருத்துவர் விஜயராகவன் கூறுகையில், ''உயிரிழந்த யானைக்கு 40 முதல் 45 வயது இருக்கலாம். மேலும், யானை வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் யானை உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் யானை பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்ததும் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடற்கூராய்விற்குப் பின்னர் யானையின் உடல் அங்கேயே குழி தோண்டப்பட்டு புதைக்கப்பட்டது'' எனத் தெரிவித்தார்.
உணவு தட்டுப்பாட்டால் ஊருக்குள் வலம் வரும் யானைகள் மற்றும் உணவின்றித் தவிக்கும் யானைகளை காப்பாற்றும் வகையிலும், மேலும் இது போன்ற யானைகளின் இறப்புகளைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் முயற்சி எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி - பொள்ளாச்சியில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்!