பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே. சுகுமார் தலைமை தாங்கினார். மண்டல பொறுப்பாளரும், திருப்பூர் மாவட்ட செயலாளருமான சண்முகவேலு கலந்துகொண்டு கழகத்தினிருக்கு ஆலோசனை வழங்கினார்.
அவர் கூறியதாவது, “உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் காரணம். அடுத்து வரவுள்ள நகராட்சி, மாநகராட்சி மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதேபோல் களப்பணியாற்றினால் நமக்கு வெற்றி நிச்சயம். அதற்கு முன்னோட்டமாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்து கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கழகக் கொடிக்கம்பங்கள் அமைக்க வேண்டும். நமது கழகத்தை விட்டுச் சென்றவர்களின் நிலைமையை எண்ணி பார்க்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து, கட்சி மேலாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் உடுமலை கே.ஜி.சண்முகம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிரி, மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, மாவட்ட இணை செயலாளர் சாந்தி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற போராடும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞர்கள் கைது