கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் சராசரியாக 300க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிக அளிவில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்தது. இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்த அறிந்த அமெரிக்காவின் நவேடா மாகாணத்தின் ரினோ நகரில் வசிக்கும் மருத்துவர் ராஜேஷ் ரங்கசாமி - நித்யா மோகன் தம்பதி, தங்களது ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட்டளையின் மூலம் 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டி, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் ராஜேஷ் ரங்கசாமி கூறுகையில், "கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நான் 1992ஆம் ஆண்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். தற்போது, அமெரிக்காவின் ரினோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூளை ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளேன். மனைவி நித்யா மோகன், குழந்தைகளுடன் இங்கு வசிக்கிறேன். நானும், என் மனைவியும் இணைந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கினோம்.
தற்போதைய சூழலில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தேவை என்பதை எனது உறவினர்கள், நண்பர்கள் மூலம் அறிந்தோம். இதையடுத்து எங்களது அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி, மருத்துவமனைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தர முடிவெடுத்தோம். அதன்படி, கடந்த வாரம் ஒருநாள் நிதி திரட்டும் பணியை தொடங்கினோம். அமெரிக்காவில் உள்ள எங்களது நண்பர்கள், தெரிந்தவர்கள் உள்ளிட்டோரிடம் செல்போன், இ-மெயில், வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டு நிதி திரட்டினோம். இந்த முயற்சியால் 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டப்பட்டது.
பின்னர், ஆக்ஸிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்த ஆர்டர் செய்து தொகையை வழங்கினோம்.
அரசு மருத்துவமனையில் ரூ.51 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தியாகும் கட்டமைப்பு, ரூ.5 லட்சம் மதிப்பில் 5 ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், இஎஸ்ஐ மருத்துவமனையில் ரூ.27 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தியாகும் கட்டமைப்பு, ரூ.3 லட்சம் மதிப்பில் படுக்கை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது" என்றார்.
இது குறித்துகோயம்புத்தூர் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், அமெரிக்க மருத்துவ தம்பதியரின் ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட்டளை ஏற்படுத்திக் கொடுத்த ஆக்ஸிஜன் கட்டமைப்பு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்மூலம் 40 படுக்கைகளில் உள்ள கரோனா நோயாளிகள் பயன் பெறுகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாற்ற '1098' எண்ணைத் தொடர்பு கொள்ளவும்!