கோயம்புத்தூர்: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பாவு புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதன் மூலம் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று கோவையில் உள்ள 10 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் கோவையில் உள்ள இவரது இல்லம், நமது நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் மற்றும் கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து எல்.இ.டி பல்புகள் கொள்முதல் செய்யப்பட்ட இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே கோவையில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பாக குவிந்தனர்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார் உட்பட பலரும் தொண்டர்களுடன் இருந்தனர். அப்போது அதிமுக தொண்டர்கள் வேலுமணியின் இல்லம் முன்பாக குவிவதை தடுக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் அதிமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி ஏதும் கைப்பற்ற படாத நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்டவை மறைப்பதற்காக திமுக அரசு இந்த சோதனையை செய்து வருவதாகவும், இந்த சோதனையிலும் ஏதும் கிடைக்காது என சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர். இருப்பினும் அவர்கள் கலைய மறுத்ததால் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், ஏகே செல்வராஜ், கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி,சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை