கோவை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று (மார்ச்.13) முதல் துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உட்பட மொத்தம் 128 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உட்பட 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் இந்த பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இன்று தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்கள் அவர்களது தேர்வு அறையை நோட்டீஸ் போர்டில் பார்த்துவிட்டு அந்தந்த அறைகளுக்கு சென்றனர்.
மேலும், தேர்வர்கள் தேர்வறைக்குள் செல்லும் முன்பு அறைக் கண்காணிப்பாளர்கள் அவர்களது உடமைகளை சோதனை செய்து அதன்பின் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். பொதுத்தேர்வுக்கக கோவை மாவட்டத்தில் 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மூக்கில் அறுவை சிகிச்சை; பொதுத்தேர்வு எழுதச் சென்ற புதுக்கோட்டை மாணவி!
இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர், "12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும், அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்வித்துறை செய்துள்ளது.
மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்: இந்த தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதுகின்றனர். பொதுத் தேர்வு எழுதுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்கள். கோவை மற்றும் பொள்ளாச்சி இரண்டையும் சேர்த்து, 35,827 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 186 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் அவர்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்புகளுக்காக 180 பேர் கொண்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.
சத்து மாத்திரை உண்ட மாணவிக்கு தொடர் சிகிச்சை: மேலும் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிவது போன்ற மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மேலும், இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் ஏதேனும் தேவைப்பட்டால் அவை செய்து தரப்படும் என்றும் கூறினார். உதகை உருது பள்ளியில் சத்து மாத்திரைகள் உட்கொண்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் மூன்று மாணவிகளில் இரண்டு மாணவிகள் பொது பிரிவிலும் ஒரு மாணவி ஐசியூவிலும் இருக்கின்றனர். மூவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்' அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: HSC Exam: பள்ளி சீருடையில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்!