கோயம்புத்தூர்: காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் புதிதாக சிறைச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அமுதா நேரடியாக கோவை வந்தார்.
கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தற்பொழுது கோவை மத்திய சிறையில் உள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், கோவை மத்திய சிறைதுறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்வில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவிற்கு உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - சௌமியா அன்புமணி
கோவை சிறைச்சாலை ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்ட சிறைச்சாலை ஆகும். எனவே, இங்குள்ள கட்டமைப்புகளை மாற்றம் செய்யாமல் அதனை கூடுதலாக தரம் உயர்த்தி கட்டுவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், ''கோவை மத்திய சிறைக்குச் சொந்தமான இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைய உள்ளதால், வேறு இடத்திற்கான பரிந்துரையினை அனுப்பி இருந்தோம்.
அதன்படி உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா, மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் சிறை அமைப்பதற்கான ஆய்வினை மேற்கொண்டார். புதிதான பகுதியில் அமைய உள்ள சிறைச்சாலையில் எதிர்காலத்திற்குத் தேவையான அனைத்து வித வசதிகளும் உள்ள சிறையைக் கட்ட வேண்டும். மேலும் கோவையில் சிறை மட்டுமல்லாது இங்கு உள்ள சிறைவாசிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனை மேட்டுப்பாளையம் பகுதியில் எதிர்காலத்திற்கு தகுந்தாற்போல் மேம்படுத்தி கட்டுவதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக தெலங்கானாவில் தற்போது கட்டப்பட்டுள்ள சிறையையும் அவர் ஆய்வு செய்து, அனைத்து வசதிகளையும் கொண்ட மார்டன் சிறைச்சாலை கட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிளிச்சியில் ஏற்கனவே சுமார் 8 ஏக்கர் அளவில் அரசு நிலம் உள்ளது. தேவைப்பட்டால் அந்நிலங்கள் கையகப்படுத்தப்படும். மேலும் சிறையில் மனித உரிமை சம்பந்தமான ஆய்வு எதுவும் இன்று செய்யப்படவில்லை'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Tenkasi: தென்காசி தொகுதியில் தபால் ஓட்டுகளின் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!