கோயம்புத்தூர் மாவட்டம் பாரதிபுரத்தில் கடந்த மே 4ஆம் தேதி கஞ்சா வியாபாரிகள் சரவணன், வசந்த் ஆகிய இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வசந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் சரவணன், சதீஷ் குமார், ஆனந்தன், ஹரிகிருஷ்ணன், பிரபு, தினோத், அஸ்வின், ஸ்ரீநாத் ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, சூலூர் ஆய்வாளர் முருகேசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி எட்டு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், மே 27ஆம் தேதி, டாக்ஸி ஓட்டுநர்கள் சூர்யபிரகாஷ், பைசல் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் சூரிய பிரகாஷ், பைசலை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார்.
இது குறித்து பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சூரிய பிரகாஷை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சூரியபிரகாஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் தீபக் எம். தாமோர், சூர்யபிரகாஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க : ஊராட்சி மன்றத் தலைவரை சாதி ரீதியாக இழிவுப்படுத்தி தாக்க முயற்சி!