கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரமான மருதமலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. மேலும் கேரள வனப்பகுதி அருகில் உள்ளதால் அங்கிருந்து அதிகளவில் யானைகள் தடாகம், மருதமலை வனப்பகுதிக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மருதமலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலா வந்தது. இதனையடுத்து அதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர்.
எனினும் யானை அதே பகுதியில் சுற்றி வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து இரவு கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை ஊருக்குள் வந்ததை அடுத்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை அடர் வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது ஊருக்குள் மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் யானை உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர்.
அதன் பின்னர் யானையை அடர் வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்திற்கு விரட்டியடித்தனர். தற்போது ஒற்றைக் காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. அந்த காட்சிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அண்மைகாலமாக யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதால், அதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.