கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள ஊஞ்ச பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 6 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி திங்கட்கிழமை (ஜூன் 19) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர், கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police) தையல்நாயகி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: நிதி நிறுவன மோசடி செய்த 1500 பேர்களின் சொத்துகள் முடக்கம் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
இதனை அடுத்து, மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி பேசிய போது, "மாணவர்கள் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறையில் உச்சம் தொட்டுள்ளனர். மாணவர்கள் எளிதாக கல்வி பயில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. படித்தால் மட்டுமே வாழ்க்கை வசப்படும்" என அறிவுரை கூறினார்.
இதனிடையே முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் (MGR) - சரோஜாதேவி (Saroja Devi) நடிப்பில் 1966ஆம் ஆண்டு வெளியான 'பெற்றால் தான் பிள்ளையா (Petralthan Pillaiya)' என்ற படத்தில் 'கவிஞர் வாலி (Vaali)' எழுதிய பிரபல பாடலான 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி. சின்னஞ்சிறு கைகளை நம்பி, ஒரு சரித்திரம் இருக்குது தம்பி" எனத் தொடங்கும் பாடலை பள்ளி குழந்தைகள் மத்தியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி பாட, திரும்பவும் அந்தப் பாடலை பள்ளி குழந்தைகள் ஒருசேர பாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Zoho : இஸ்ரேல்-ஆசியா வணிக நிறுவனத்துடன் சோகோ ஒப்பந்தம்.. இஸ்ரேல் மார்க்கெட்டில் கால் பதிக்கும் சோகோ!