கோயம்புத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் காளை மாடுகளுக்கு மாலை அணிவித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பின்னர் கூடியிருந்த பொது மக்கள் மத்தியில் பேசிய ஜக்கி வாசுதேவ் பக்தர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒவ்வொருவரும் 5 விடயங்களை குறித்து வைத்து கொள்ள வேண்டும் அந்த 5 விடயங்களை செய்து கொடுப்பேன் என உறுதியளிப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
என்னை பொறுத்தவரை காவேரி நீர் பங்கீட்டில் 3 மாநிலங்களும் ஒன்றிணைந்து அறிவியல்பூர்வமாக குழு அமைத்து தண்ணீர் சேமிப்பு நடவடிக்கை கொண்டு வர வேண்டும். கோவில்களை அரசு பராமரிக்காமல் சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என 5 விடயங்களை வைத்திருக்கிறேன் இவற்றை நிறைவேற்றும் கட்சிக்கே ஓட்டு என தெரிவித்தார்.
தொடர்ந்து நிறைய பள்ளிகள் மாட்டு சாலைகள் போன்று உள்ளது அரசாங்கம் பள்ளியை நடத்துவதற்கு பதில், பள்ளிகளை நடத்தும் ஆர்வம் இருப்பவர்களிடம் பள்ளிகளை ஓப்படைக்க வேண்டும், அப்படி, பள்ளியை நடத்துபவர்களிடம் வசதி இல்லாத மாணவர்களுக்கான பணத்தை அரசாங்கம் கட்ட வேண்டும் எனவும் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "காவேரி நதி புத்துணர்விற்காக வேலை செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மக்கள் செல்ல வேண்டிய அளவிற்கு மண் வளம் தயார் செய்யப்பட வேண்டும்.
உணவு பொருட்களை எங்கே வேண்டுமானாலும் விற்க விவசாயிக்கு உரிமை வழங்க வேண்டும். டிகிரி வாங்கியும் இளைஞர்களிடம் எந்த திறமையும் இல்லாத நிலை இருக்கின்றது. 18 வயதுக்கு பூர்த்தியான அனைவருக்கும் ஏதோ ஒரு திறமை இருக்க வேண்டும். அதற்காக அனைத்து மாவட்டத்திலும் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.
கோவில்களை அடிமைதனமாக வைத்திருக்கின்றோம், எந்த சாதி , எந்த மதம் என இல்லாமல் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் வகையில், 36 ஆயிரம் கோவில்களை படிப்படியாக சமூகத்தில் பொறுப்பானவர்களிடம் ஓப்படைக்க வேண்டும். சமூகத்தில் கோவில்களை அரசு நடத்துவது என்பது ஒரு இன்சல்ட்டாக இருக்கின்றது
இந்த 5 விடயங்களை செய்து கொடுக்கும் கட்சிகளுக்கே எனது வாக்கு எனத் தெரிவித்தார்.
இப்போது விவசாய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரலாம் எனவும், ஆனால் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி அவற்றை அமல்படுத்தலாமா என்பதை மாநில அரசின் முடிவிற்கு விட்டுவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.