கோயம்புத்தூர்: பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மாங்குழி வனப்பகுதியில் இன்று (பிப்.09) வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருகப்பதி வனப்பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக வனப் பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது இறந்து பல நாட்கள் ஆன யானை குட்டியின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன.
இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் கோவை கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் தலைமையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர், யானையின் உடலை ஆய்வு செய்தனர். அதில் குட்டி யானை இயற்கைக்கு மாறாக உயிரிழந்ததற்கான எந்த தடையும் கிடைக்கவில்லி. மேலும், பெருக்கப்பதி பழங்குடியின கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த யானை உயிரிழந்தது தெரியவந்தது.
யானை உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் அதன் உடற்பகங்கள் அழுகி எலும்புகள் வெளியே சிதறி கிடந்ததால் உயிரிழந்தது ஆண் யானையா? பெண் யானையா? என்பதை கண்டறிய முடியவில்லை என்பதால் இதனை அடுத்து உயிரிழந்த யானையின் சில பாகங்கள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள உடற்பாகங்கள் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
கடந்த வாரம் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் குட்டி யானை ஒன்று உயிரிழந்துள்ளது சூழலியல் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிப்.14 இனி காதலர் தினம் இல்லையாம் 'COW HUG DAY' வாம்!