கோவை: பொள்ளாச்சி ஆனைமலை இந்திரா நகரில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனைப் பட்டா நிலத்தில் வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் 8 பேர் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவ்வமைப்பின் நிர்வாகி கணேஷ், "ஆனைமலை மெகராஜ் பீபி என்பவருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்துவந்தார்.
பின்பு, திருப்பூரைச் சேர்ந்த அப்துல்லா என்பவரிடம் பதிவு செய்யப்படாத ஆவணம் மூலம் பணம் பெற்றுக்கொண்டு இடத்தை விற்பனை செய்துள்ளார்.
அந்த இடத்தில், தற்போது வழிபாட்டுத்தலம் கட்டப்பட்டுவருகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்காக அரசு கொடுத்த பட்டா நிலத்தில் வழிபாட்டுத்தலம் கட்டுவது தெரிந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்.
சார் ஆட்சியர் பொதுமக்களின் ஆட்ஷேபனைக்குரிய இந்த இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளார்.
வட்டாட்சியர் அறிக்கையின்பேரிலும் பொதுமக்களின் நலன் கருதியும் மெகராஜ் பீபிக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்து அந்த இடத்தை அரசு திரும்பப் பெறவேண்டும்" என வலியுறுத்தினார்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை முயற்சிசெய்தபோது, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்க தான்’ - குடிபோதையில் போலீஸை கலாய்த்த இளைஞர்!