கோவை: கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் வடக்கு வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவர், தனது மகள் ஹேமர்னா (7) உள்பட குடும்பத்தினருடன் மைசூருவுக்குச் சென்றிருந்தார். அங்கு, உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, ஹேமர்னாவின் கைவிரல் கதவு இடுக்கில் சிக்கி காயம் ஏற்பட்டது.
ஹேமர்னாவுக்கு அங்கு முதலுதவி சிகிச்சையளித்துவிட்டு ஊர் திரும்பிய கார்த்திகேயன், கைவிரலில் வீக்கம் தொடர்ந்து இருப்பதைக் கண்டு சிங்காநல்லூர் பகுதியிலுள்ள டாக்டர் முத்தூஸ் எலும்பு சிகிச்சை மருத்துவமனையில் ஹேமர்னாவை சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிறுமிக்கு சிறிய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று (ஜன. 27) மாலை சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில், அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், மருத்துவர்களின் தவறான சிகிச்சையே தனது மகளின் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக விசாரித்துவருகின்றனர்.
கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மூன்றரை வயது மகள் பிரியதர்ஷினி இதேபோல், கையில் ஏற்பட்ட காயத்திற்காக சரவணம்பட்டி பகுதியிலுள்ள முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.
இதுதொடர்பாகவும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கட்டியிருந்ததாகவும், சிறுமி கீழே விழுந்ததை பெற்றோர்கள் தங்களிடம் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
மேலும், கைவிரலுக்குச் சிகிச்சை முடிந்த பின்பு குழந்தைக்கு வலிப்பு வந்ததாகவும், அதன்பின்பு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் குழந்தைக்குத் தலையில் ரத்தம் கட்டியிருந்தது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்துவருவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் போக்சோவில் கைது