கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் கோவை விமான நிலையம் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சார்ஜாவிலிருந்து நேற்று காலை கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பிடித்து விசாரித்ததில் தங்கத்தை கடத்தியது தெரிய வந்தது. அந்த 4 நபர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்டுகளிலும் உள்ளாடைகளிலும் மறைத்து வைத்து சுமார் 3.03 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்திருந்தது தெரியவந்தது.
வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு 1.09 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜியாவுதீன், மற்றும் சென்னையைச் சேர்ந்த சேஷ் முகமது என்ற இருவரை கைது செய்தனர். இது தொடர்பாக மற்ற இருவரிடமும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி அருகே பீகார் இளைஞர் அடித்துக்கொலை: போலீசார் விசாரணை!