கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன. இதனால், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பலர் லாரிகளில் மறைமுகமாக பயணம் செய்வதைக் காவல் துறையினர் கண்டுபிடித்து எச்சரித்துவருகின்றனர்.
மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துவருகின்றன. இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர் ஏஜி புதூர் பைபாஸ் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 5 கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் கரோனா பீதி காரணமாக தர்மாகோல் ஏற்றிச்செல்லும் லாரியில் வெளிமாநில தொழிலாளர்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலத்திற்குச் செல்லும் 3 கண்டெய்னர் லாரியில் 197 பேரும், மத்திய பிரதேச மாநிலத்திற்குச் செல்லும் 2 கண்டெய்னரில் 53 பேரும் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் டெல்லியைச் சேர்ந்த ராஜேந்திர சிங் (40), பல்ராம் (38) , உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்திர பால் சிங் (28) , அணில் குமார் (28), முகேஷ் பாட்டியா (32) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களின் மீது சட்ட விரோதமாக கூடுதல், நோய் தொற்றைப் பரப்புதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளரை கவுரவித்த பஞ்சாப் மக்கள்