சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் மப்பேடு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், தீனதயாளன் என்கிற தயாளம்மாள் (50). திருநங்கையான இவர், கடந்த சனிக்கிழமை அன்று சேலையூர் மாடம்பாக்கம் கோவிலஞ்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள குட்டையில் மர்மமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர். விசாரனையின்போது படுகொலை செய்யப்பட்டிருந்த தயாளம்மாள் பயன்படுத்திய இரண்டு செல்போன்கள் காணாமல் போனதும், அந்த செல்போன் எண் கடைசியாக சென்னை பர்மா பஜார் பகுதியில் சுவிட்ச் ஆப் ஆனது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பர்மா பஜார் விரைந்த தனிப்படை போலீசார், அங்குள்ள செல்போன் கடைகளில் விசாரணை செய்தபோது, இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் செல்போனை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜாஜி என்கின்ற ராஜா (28) மற்றும் சந்திரன் (26) என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அவர்களது வீட்டிற்குச் சென்று பார்த்ததில் இருவரும் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. அப்போது அவர்களது பெற்றோரிடம் கேட்டபோது, திருவள்ளூரில் உள்ள நண்பர்கள் வீட்டில் இருப்பதாகக் கூறி உள்ளனர். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் திருவள்ளூர் விரைந்து சென்று ராஜா மற்றும் சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து, சேலையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் ராஜா என்பவர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையில் தயாளம்மாள் மதுபானக் கடையின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும், இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர், அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து தயாளம்மாளை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி, 2 விலை உயர்ந்த செல்போன்களை எடுத்துக் கொண்டு, தயாளம்மாள் உடலை அருகில் உள்ள குட்டையில் வீசிச் சென்றாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜா மற்றும் சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு கொடுத்த நெல் ரகங்களால் பெரும் நஷ்டம்.. குழந்தை போல் வளர்த்த பயிர்களை டிராக்டர் விட்டு அழித்த விவசாயிகள்.. தஞ்சையில் நடந்தது என்ன?