சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில் அவருக்கு உள்துறை அமைச்சகம் Z+ பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 17) காலை 7.30 மணி அளவில் சிறப்பு விமானத்தில் டெல்லி சென்றார்.
அங்கு அவருக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, டெல்லி தீனதயாள் உபாத்தியா மார்க் சாலையில் கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட்ட அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.
அதனையடுத்து, பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுவினை அளித்தார். குறிப்பாக மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வினை ரத்து செய்வது, செங்கல்பட்டு தடுப்பூசி மையம் , மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனு அளித்துள்ளார்.
முதலமைச்சர் டெல்லி சென்றுள்ள நிலையில் மத அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி Z+ பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு ஏற்கனவே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர்கள் மு. கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடியுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!