சென்னை: அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை வளர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கக்கூடிய எல்.முருகன் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த போது, அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால், பாஜகவின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்த அண்ணாமலைக்கு, மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அண்ணாமலை பதவியேற்றதில் இருந்து திமுக அரசு கொண்டு வரும் திட்டங்கள் மீது விமர்சனங்கள் செய்து வருகிறார்.
அரசுக்கு எதிராக பல்வேறு விதமான போராட்டங்கள் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த பொதுக்கூட்டங்கள் என அண்ணாமலை கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள், மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததுள்ளது என கூறப்படுகிறது.
இதனையடுத்து, தற்போது ஒய்- ('Y) பிரிவு பாதுகாப்பில் உள்ள அண்ணாமலைக்கு இஸட்-('Z) பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
இதையும் படிங்க:"ஆளுநர் உரையன்று நடந்ததை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை" - முதலமைச்சர்!