சென்னை: பரங்கிமலை பூந்தோட்டம் ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர், அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், பரங்கிமலை கலைஞர் நகரைச் சேர்ந்த நவீன் என்பவர், மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெகுநாள்களாக பேசி வந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாணவி, நவீன் உடன் பேசுவதை தவிர்த்து விட்டதாக தெரிகிறது.
இதனால், விரக்தியில் இருந்த நவீன் தொடர்ந்து, அந்த மாணவியிடம் தன்னுடன் பேசுமாறு தொந்தரவு செய்துவந்துள்ளார். இதனை இளம்பெண் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அப்பெண் இன்று (ஜூலை 07) வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்று விட்டு, பரங்கிமலை பூந்தோட்டம் ஏழு கிணறு தெரு வழியாக வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவரை வழிமறித்த நவீன் அவரிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதில், படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த நந்தம்பாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நவீன் செல்போன் என்னை வைத்து டிரேஸ் செய்து, அவர் இருக்கும் இடத்தை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், நவீன் அதே பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
இதைடுத்து, நவீன் இருக்கும் இடத்தை சுற்றி காவல் துறையினர் தேடிவந்தனர். ஒருகட்டத்தில் நவீன் இருப்பதை அறிந்த காவல் துறையினர், அவரை நோக்கி சென்றனர். அப்போது, காவல் துறையினரின் வருகையை அறிந்த நவீன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருந்த போதிலும் காவல் துறையினர் விடாமல் நவீனை மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று சினிமா பானியில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அப்போது நவீன் கீழே விழுந்ததில் மயக்கம் அடைந்தார். உடனே காவல் துறையினர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர். அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் ஆள்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தபோதே மாணவியை கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: போலி போலீஸை சுற்றி வளைத்த ரியல் போலீஸ்... நாமக்கல்லில் அரங்கேறிய திருட்டுச் சம்பவம்!