சென்னை: தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை பகுதியைச்சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன் தினம் (அக்-7)இறந்த நிலையில் அவரது இறுதி ஊர்வல நிகழ்வு நேற்று (அக்-8) மாலை நடைபெற்றது. அப்பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் பலர் குடிபோதையில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.
அப்போது அதிலிருந்த இளைஞர்கள் பலர் அவ்வழியாக வந்த மாநகரப்பேருந்தை வழிமறித்து, சாலையின் நடுவில் பட்டாசுகள் வெடித்தது மட்டுமல்லாமல், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், அப்பகுதியில் இருந்த கடைகளின் ஷட்டர்களை இழுத்து மூடி தகராறிலும் ஈடுபட்டனர்.
அவர்களில் ஒரு நபர் அங்கு நின்றுகொண்டிருந்த மாநகரப்பேருந்தின் முன் பக்கமாக ஏறி, கண்ணாடியைத் தட்டிவிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்ட காட்சிகளை, கெத்து காட்டுவதாகக் கருதி வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.
அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில், தேனாம்பேட்டை போலீசார் எல்டாம்ஸ் சாலை பகுதியைச்சேர்ந்த சதீஷ், உதயா ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து, சிறிய அளவிலான வழக்குப்பதிவு செய்து அவ்விருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! பாய்ந்தது போக்சோ...